இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை வென்று தரவேண்டும் என்பதே இவர்கள் இருவரது குறிக்கோளாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் இதனைப் பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் நிர்வாகம், செய்ய வேண்டிய சில வேலைகளை கூறியிருக்கிறார். அதாவது டி20 கிரிக்கெட் மோகத்தால் ரசிகர்கள் ஒருநாள் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் பெருமளவில் குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரசிகர்களை மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட் பக்கம் ஆர்வத்தை திருப்ப, இவர்கள் இருவரை வைத்து பிசிசிஐ சரியாக காய்களை நகர்த்த வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
அதாவது இர்பான் பதான் கூறும்போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள். எனவே அதற்கு தகுந்தவாறு பிசிசிஐ மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு பதிலாக 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடராக மாற்ற வேண்டும். அது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு நாள் உலகக் கோப்பைக்கு காலம் இருப்பதால் அதற்குள் இரு தரப்புத் தொடர், முத்தரப்புத் தொடர் என்று ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படி விளையாடினால்தான் இவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாடி அவர்களது பேட்டிங் ஃபார்மை தக்க வைத்திருப்பார்கள். இதன் மூலம் ரசிகர்களையும் ஈர்க்க முடியும்” என்று பேசி இருக்கிறார்.

