இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சிறந்த வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் மிகவும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்கிற கருத்துக்கள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்தியா உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்த இஷன் கிஷன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக சஞ்சு சாம்சன் இடத்தை அவர் ஏறக்குறைய உறுதி செய்து விட்டார் என்று நம்பலாம். இந்த சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் சரிவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கோச் கெளதம் கம்பீர் மற்றும் செலெக்டர் அகர்கர் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “சஞ்சு சாம்சன் இப்போது ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவரது மனநிலை மற்றும் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அவர் தற்போது சிரமப்பட்டு வருகிறார். இதே சாம்சன் தான் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று சதங்கள் அடித்து இருந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி அவர் நல்ல முறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று வேறு ஒருவரை அவரது தொடக்க இடத்தில் விளையாட சொன்னார்கள். இவரது இந்த நிலைமைக்கு அந்த விஷயமும் முக்கிய காரணம்” என்று பேசியிருக்கிறார்.

