ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் நடக்க உள்ள இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடைபெற்றது.
விக்கெட் கீப்பர் யார்?
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கான நம்பர் 3 பேட்ஸ்மேனை உறுதி செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அந்த காயத்தில் இருந்து ரிஷப் பண்ட் குணமடைய சில வாரங்களாகும் என்பதால், துருவ் ஜுரெல் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளதாக தெரிகிறது.
இவருக்கான மாற்று வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் துலீப் டிராபியில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அதேபோல் துருவ் ஜுரெல் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் விளாசி இருந்தார். அவருடன் தேவ்தத் படிக்கலும் அபாரமான ஃபார்மில் இருந்தார்.
2 வீரர்களுக்கு வாய்ப்பு
இதனால் தேவ்தத் படிக்கலை இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் விளையாடி இருந்தார். தற்போது மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளார். இதுமட்டுமல்லாமல், ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியை தயார் செய்யவும் இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பின் நிதீஷ் குமார் ரெட்டி இங்கிலாந்துக்கு பயணித்தார். ஆனால் நிதீஷ் குமார் ரெட்டி பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல் 3வது டெஸ்ட் போட்டிக்கு பின் அவரும் காயம் அடைந்து சொந்த ஊர் திரும்பினார். தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் சில வீரர்களுக்கு கூடுதல் ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

