ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறி இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளும் அரையிறுதி வாய்ப்புடன் உள்ளன.
இதில் எந்த 2 அணிகள் முன்னேறும் என்ற குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது. இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மட்டும் ஒரே மைதானத்தில் ஆடுவது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடப்பதால், இந்திய அணி துபாய் மைதானத்தில் விளையாடி வருகிறது.
மிட்சல் ஜான்சன் கடிதம்
இந்த நிலையில் இந்திய அணி மட்டும் ஒரே மைதானத்தில் ஒரே இடத்தில் இருந்து விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் மிட்சல் ஜான்சன் ஐசிசிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடாமல் துபாய் மண்ணில் ஆடுவது சாதகமாகி உள்ளது.
தொடர் முழுக்க ஒரே பிட்சில் ஆடும் சாதகம் உருவாகி இருக்கிறது. இதுதொடர்பாக ஏராளமான நபர்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சாதகம், மற்ற அணிகளுக்கு பாதகமாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேர்மையையும், குழு ஒருமைப்பாடும் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
இந்த சூழல் தொடரின் நேர்மை குறித்த கேள்விகளும் எழுப்பியுள்ளது. அதுவும் இறுதிப்போட்டி நெருங்கும் சூழலில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. ஒருவேளை இறுதிப்போட்டி துபாய் மண்ணில் நடக்கவிருந்தால், எதிரணி விரைவாக துபாய் பயணித்து பயிற்சியை தொடங்குவதற்கு சரியாக திட்டமிட வேண்டும். நிச்சயம் அது மிகப்பெரிய சவால்தான் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு புதிய கதவுளை திறந்துள்ளது. அடுத்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததால், சாதாரணமாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

