இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான t20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இசான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசத் தீர்மானிக்க, ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக மெதுவாக காணப்பட்டது. ஆனால் தொடக்க வீரர் இஷான் கிஷன் தன் பலத்திற்கு சிறப்பாக விளையாடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் அவரது அதிரடி தான் இந்திய அணி 17 ரன்கள் தாண்ட முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் அவர் இந்த வெற்றி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “தொடக்கத்தில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது இந்த ஆடுகளம் கடினமாக இருந்தது. ஆனால் நீங்கள் உங்கள் பலத்தில் நம்பிக்கை வைத்து கவனம் செலுத்தி விளையாட வேண்டும். முடிந்தவரை அவர்களை என் திசையில் விளையாட வைக்க விரும்பினேன். எனது ஆப் சைடு ஆட்டத்தில் நான் நிறைய உழைத்தேன். நான் விஷயங்களை எளிதாக வைத்திருக்க விரும்பினேன். நான் விளையாடும் போது 160 ரன்கள் முதல் 170 ரன்கள் வரை எடுத்தால் நல்ல இலக்காக இருக்கும் என்று மனதில் வைத்திருந்தேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்பது அணிக்கான போட்டியாக அல்லாமல் இது ஒரு நாட்டுக்கான போட்டியாகவும் இருக்கிறது. இந்த போட்டியின் வெற்றி பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது” என்று அவர் பேசியிருக்கிறார்.

