சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஒரேயொரு சதம் மட்டுமே விளாசி இருந்த விராட் கோலி, அதன்பின் மோசமான ஃபார்மில் இருந்தார். ஆனாலும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அபாரமான ஃபார்மில் இருந்தார்.
இதனால் இன்னும் ஒரு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என்று சொல்லப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பாக பிசிசிஐ நிர்வாகிகளிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக விராட் கோலி கூறியதாக தகவல் வெளியாகியது. இதன்பின் விராட் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது என்று லாரா, கிளார்க், ராயுடு உள்ளிட்ட பலரும் அறிவுறுத்தினர்.
விராட் கோலி ஓய்வு
இந்த சூழலில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பாக விராட் கோலி எழுதியுள்ள பதிவில், டெஸ்ட் கிரிக்கெட் கேப்பினை அணிந்து விளையாட தொடங்கி 14 ஆண்டுகளாகிவிட்டது. இவ்வளவு தூரம் இந்த டெஸ்ட் கிரிக்கெட் என்னை இழுத்து செல்லும் என்று நினைக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட் என்னை அதிகமாக சோதித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் என்னை அதிக மாற்றி இருக்கிறது. வாழ்க்கை முழுக்க எடுத்து செல்லும் அளவிற்கு எனக்கு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் பெர்சனலான விஷயம். அதன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
வாழ்க்கைப் பாடம்
வெள்ளை ஜெர்சி, 5 நாட்கள், சின்னச்சின்ன விஷயங்கள்.. யாருமே கவனிக்கவில்லை என்றாலும், அது எப்போதும் நினைவில் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இதுதான் சரியான நேரம் என்று தோன்றுகிறது. என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன். டெஸ்ட் கிரிக்கெட் எனக்கும் அதிகமாகவே கொடுத்துள்ளது.
நிறைவான மனதுடன் இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி செல்கிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை சிரிப்புடன் திரும்பி பார்ப்பேன் என்று பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

