வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஜாக்கர் அலி பவுலிங்கை தேர்வு செய்தார். லிட்டன் தாஸ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை மட்டுமே எடுத்தது.
சஞ்சு சாம்சன் பாவம்
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நம்பர் 5 பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டிருந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், கடைசி வரை களமிறக்கப்படவில்லை. நம்பர் 3 வீரராக சிவம் துபே களமிறங்கிய போது, அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
அக்சர் படேலை விடவும் சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பது நாடறிந்த விஷயம். அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் தான் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி சதங்களை விளாசி தள்ளினார். பிட்சும் ஸ்பின்னர்களுக்கு ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த போதும், சஞ்சு சாம்சன் கடைசி வரை களமிறக்கப்படவில்லை.
கம்பீரின் அரசியல்
இதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காரணமாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் சஞ்சு சாம்சனை நீக்க முடியாது என்பதால், அவரை சுப்மன் கில்லுக்காக நம்பர் 5 வீரராக சேர்த்து வருகின்றனர். ஆனால் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் இன்னும் முழுமையாக திறமையை நிரூபிக்காததால் அவரை இந்திய அணி நிர்வாகம் நம்ப மறுத்து வருகிறது.
அதேபோல் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை கொஞ்சம் கூட எந்த முனைப்பும் இல்லாமல் மாற்றி இருக்கின்றனர். என்ன காரணத்திற்காக ஹர்திக் பாண்டியா நம்பர் 5 வீரராக 12வது ஓவரிலேயே களமிறங்கினார் என்பது யாருக்கும் புரியவில்லை. ஏனென்றால் மிடில் ஓவர்களில் திலக் வர்மா சிறப்பாக ஆடிய போது, ஹர்திக் களமிறங்கியது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

