நாளை நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்திய ரசிகர்களை சைலன்ட் செய்வோம் என நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறியதற்கு இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார்.
இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் நாளைய போட்டியில் இந்திய ரசிகர்களை சைலன்ட் செய்வதை தங்களுடைய முக்கிய இலக்கு என்று கூறியிருந்தார். மேலும் சூழ்நிலைகள் அடிக்கடி மாறும் டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் “எல்லோரும் ஒரே மாதிரி இந்திய ரசிகர்களை சைலன்ட் செய்வோம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கொஞ்சம் ஏதாவது மாற்றி புதியதாக முயற்சி செய்து வேறு எதையாவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்”
“ஒரு அணியாக நாங்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். நாங்கள் மிகப்பெரிய இறுதிப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மேலும் இந்தியாவில் இப்படி ஒரு பெரிய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவது என்பது எனக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் மிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

