ஆசியக் கோப்பை தொடரின் இறுதி சுற்றுக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின் களமிறங்கிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
சூர்யகுமார் யாதவ் பேட்டி
இதனால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னரான குல்தீப் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் சிறப்பாக ஆடி 37 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியை தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ஆசியக் கோப்பையில் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓமன் அணிக்கு எதிராக மட்டுமே முதல் பேட்டிங்கை ஆடினோம். சூப்பர் 4 சுற்றில் ஒருமுறை முதல் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். சில விஷயங்களை பார்க்க வேண்டியதாக இருந்தது.
சிவம் துபே ஏன்?
வங்கதேச அணியின் பவுலிங் லைன் அப்பில் இடதுகை ஸ்பின்னர் மற்றும் லெக் ஸ்பின்னர் இருந்தனர். அதனால் சிவம் துபே சரியான பேட்ஸ்மேனாக இருப்பார் என்று எண்ணி, அவரை நம்பர் 3ல் களமிறக்கினோம். 7 முதல் 15 ஓவர்கள் வரை சிவம் துபே தாக்குபிடிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அந்த திட்டத்தை எங்களால் சரியாக செயல்படுத்த முடியவில்லை.
அப்படிதான் சில நேரங்களில் நடக்கும். அவுட் ஃபீல்ட் சரியாக இருந்திருந்தால், நிச்சயமாக ஸ்கோர் 180 ரன்களை கடந்திருக்கும். எங்களின் பவுலிங்கை பார்க்கும் போது, 12 முதல் 14 சிறந்த ஓவர்களை வீசினாலே, பெரும்பாலான போட்டிகளில் வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார். அடுத்ததாக இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது.

