இந்திய அணிக்கு உள்ளே, வெளியே என்று கடந்த 8 ஆண்டுகளாக பிசிசிஐ-யால் அதிக கஷ்டங்களை சந்தித்தவர் சஞ்சு சாம்சன். கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், நேற்றைய ஆட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
ரஜத் பட்டிதார், சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகிய 3 பேரும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்த நிலையில், திலக் வர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் அமைத்த 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக மாறியது. இதன் மூலமாக இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
அதுமட்டுமல்லாமல் கடந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது. ஆனால் இம்முறை கேஎல் ராகுல் தலைமையிலான இளம் படை 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று சாதித்துள்ளது.
கடந்த முறையை ஒப்பிடும் போது கேஎல் ராகுலின் கேப்டன்சி பெரியளவில் முன்னேற்றம் அடைந்துள்ளார். பவுலிங் சேஞ்ச்-ல் அசத்துவதோடு, டிஆர்எஸ் அப்பீல் துல்லியமாக செயல்பட்டு வருகிறார். இதனால் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் கேஎல் ராகுலும் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெற்றிக்கு பின் கேஎல் ராகுல் பேசும் போது, உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் மீண்டும் கிரிக்கெட் களம் திரும்பியதே மகிழ்ச்சி தான். இந்த தொடரில் ஆடிய பல வீரர்களுடன் பல ஐபிஎல் போட்டிகளில் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவர்களுடன் தென்னாப்பிரிக்காவில் விளையாடியது கூடுதல் மகிழ்ச்சி. முடிவை பற்றி கவலைப்படாமல் 100% உழைப்பையும் கொடுத்து ஜாலியாக விளையாட வேண்டும்.
அதுதான் இளைஞர்களுக்கு நான் அளித்து வரும் அறிவுரை. இந்த அணியில் ஏராளமான சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சர்வதேச அனுபவம் மட்டுமே குறைவு. அதனால் அவர்களின் பணி என்ன என்பதையும், கொஞ்சம் திறமையை வெளிப்படுத்த நேரமும் அளித்தாலே போதுமானது. ஐபிஎல் போட்டிகளில் சஞ்சு சாம்சன் எப்படியான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்திய டாப் ஆர்டரில் ஜாம்பவான் வீரர்கள் இருந்ததால், அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

