தற்போது இந்திய அணியில் சிவம் துபே மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உருவாகி இருக்கிறார். இந்த நிலையில் அவரை எப்படி பந்துவீச்சாளராக தயார்படுத்தினேன் என்பது குறித்து இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் எளிதாக கிடைப்பார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் கிடைப்பது மிகவும் கடினம். இந்த நிலையில் சிவம் துபே தானாக முயற்சி மேற்கொண்டு மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உருவாகி இருக்கிறார்.
இதுகுறித்து மோர்னே மோர்கல் பேசும்பொழுது “சிவம் துபே உடன் எனது பயணம் தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. நாங்கள் அவரை நம்பி ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் ஓவரை கொடுத்தோம். அவர் ஒரு ஆல்ரவுண்டராக உருவாகி இருப்பதற்கான பாராட்டை நாம் அவருக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டும். போட்டியில் அவருக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வருத்தத்துடன் வெளியே வருவார். அந்த ஆர்வம்தான் அவரை இங்கு கொண்டு வந்தது”
“அவரிடம் நிறைய திறமையும் வேரியேஷன்களும் பந்துவீச்சில் இருக்கிறது. அவருக்கு தேவை எல்லாம் இதை எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்கின்ற புரிதல் மட்டும்தான். மேலும் அவர் ஒரு பவர் ஹிட்டராக இருப்பதால் பேட்ஸ்மேன் எங்கு அடிப்பார் என்று நன்றாக தெரிகிறது. இது கூடுதல் பலம்” என்று கூறியிருக்கிறார்.

