நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இன்று இந்திய அணி நமிபியா அணிக்கு எதிராக டெல்லி மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உடல்நலம் இல்லாததால் விளையாடவில்லை என சூரியகுமார் யாதவ் டாஸ் நிகழ்வின்போது தெரிவித்தார். மேலும் இவருடைய இடத்திற்கு மாற்று துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இத்துடன் டாஸ் வென்ற நமிபியா அணி முதலில் பந்து வீசியது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியாக மூன்று சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 8 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி தலா 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. நமிபியா பந்துவீச்சில் கேப்டன் எரஸ்மஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய அனுபவம் இல்லாத நமிபியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீன்காம்ப் 20 பந்தில் 29 ரன்கள், ப்ரைலின்க் 15 பந்தில் 22 ரன்கள் என அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள். இருந்தாலும் மிடில் ஓவர்களில் அந்த அணியின் பேட்ஸ்மேன்களால் அந்த துவக்கத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. இறுதியாக நமிபியா அணி 18.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 3, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்கு இதுவே மிகப்பெரிய ரன் வித்தியாச வெற்றியாக பதிவாகியுள்ளது.

