இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில் இன்று முதல் டி20 போட்டி நடைபெற்றது. கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி இந்திய அணி சவாலான ஸ்கோரை நிர்ணயிக்க உதவினார்கள். ஜெய்ஸ்வால் நாற்பது ரன்களும், கில் 34 ரன்களும் சூரியகுமார் யாதவ் 58 ரன்களும் ரிஷப் பண்ட் 49 ரன்களும் குவித்தனர். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஐந்து பேட்ஸ்மேன்கள் சொற் ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதனால் இந்திய அணி 214 ரன்கள் இலக்கை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பந்து வீச்சு தரப்பில் இலங்கை அணியின் பதிரானா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்கு பின்னர் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்கம் சரியாக அமைந்த போதிலும், அதற்கு பின்னால் வந்த பேட்ஸ்மேன்களின் சீரற்ற செயல்பாடுகளின் காரணமாக 19.2 ஓவரில் 10 விக்கெட்கழையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதிகபட்சமாக இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிஷாங்கா 48 பந்துகளில் 79 ரன்களும், குஷால் மெண்டிஸ் 27 பந்துகளில் 48 ரன்களும் குவித்தனர். அதற்குப் பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் குறைந்த ரன்களிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியினரில் பகுதி நேர பந்துவீச்சாளரான ரியான் பராக் 1.2 ஓவர்களில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையும் படிங்க:சூரியகுமார் ரிஷப் பண்ட் அசத்தல் பேட்டிங்.. பதிரானா சிறப்பான பந்துவீச்சு.. மெகா இலக்கை நிர்ணயித்த இந்திய அணி
அக்சார் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளும், அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்த சிராஜ் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது ஒரு போட்டியில் வெற்றி பெற்ற முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வலுவாக விளங்குவதால் அடுத்த போட்டி இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்பது சந்தேகம் இல்லை.

