ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி களமிறங்கியது. இதில் சிவம் துபே, பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 31 பந்துகளில் 61 ரன்களை விளாசி தள்ளினார்.
இதன்பின் இலங்கை அணி தரப்பில் நிசாங்கா – குசால் மெண்டிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ் டக் அவுட்டாகி வெளியேற, நிசாங்கா – குசால் பெரேரா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் 2வது ஓவரில் முதலே அதிரடியில் ஆர்ப்பரித்தனர். அதிலும் நிசாங்கா ஒரு படி மேலே சென்று மிரட்டிவிட்டார்.
சதம் அடித்த நிசாங்கா
ஹர்சித் ராணா வீசிய 5வது ஓவரில் மட்டும் 4, 6, 6, என்று 16 ரன்கள் விளாசப்பட, 6 ஓவர்கள் முடிவில் 72 ரன்களை இலங்கை அணி எட்டியது. சிறப்பாக ஆடிய நிசாங்கா 25 பந்துகளில் அரைசதம் கடக்க, குசால் பெரேராவும் 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதனால் 9 ஓவர்களிலேயே இலங்கை அணி 100 ரன்களை கடந்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து அசராமல் சென்றது.
அப்போது வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் குசால் பெரேரா 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 157 ரன்களாக உயர்ந்தது. பின்னர் வந்த கேப்டன் அசலங்கா 5 ரன்களிலும், கமிண்டு மெண்டிஸ் 3 ரன்களிலும் வெளியேறினர். இருந்தாலும் சிறப்பாக ஆடிய நிசாங்கா 52 பந்துகளில் சதத்தை எட்டினார்.
சூப்பர் ஓவருக்கு சென்ற ஆட்டம்
இறுதியாக இலங்கை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 12 ரன்கள் தேவையாக இருந்தது. ராணா வீசிய முதல் பந்திலேயே நிசாங்கா 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அந்த ஓவரில் ஷனகாவின் அதிரடியால் சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது. கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையான போது, 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் இலங்கை அணி வெறும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குசால் பெரேரா முதல் பந்தில் ஆட்டமிழக்க, ஷனகா 5வது பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆசியக் கோப்பையில் ஒரு தோல்வியை கூட பெறாமல் இந்திய அணி விளையாடி வருகிறது.

