ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து – இந்தியா அணிகள் ஆடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை குவித்தது. இந்திய அணிக்காக பவுலிங் செய்ததில் குல்தீப் மற்றும் வருண் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்பின் 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவர் முதலே ரோஹித் சர்மா தன் ஸ்டைலில் அதிரடியில் ஆடி அசத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 7 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. சுப்மன் கில் சூழலுக்கு ஏற்ப ஆடி, ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேட்டிங் செய்தார்.
அதிரடி காட்டிய ரோஹித் சர்மா
அதிரடியில் கலக்கிய ரோஹித் சர்மா 41 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது, சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின் வந்த விராட் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்ப, தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 76 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 122 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின்னர் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் – அக்சர் இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை நிதனமாக உயர்த்தினர். ஸ்ரேயஸ் எந்த பதற்றமும் இல்லாமல் ஆடினார். அரைசதம் அடிப்பார் என்று பார்க்கப்பட்ட போது, 48 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் அக்சர் படேலும் 29 ரன்களில் பெவிலியன் சென்றார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது.
அசத்திய கேஎல் ராகுல்
அப்போது கேஎல் ராகுல் – ஹர்திக் பாண்டியா இணை இணைந்து நிதானமாக விளையாடியது. இருவரும் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் ஆடியதால் கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்று ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியாக கேஎல் ராகுல் வெற்றிகரமாக இந்திய அணியை இலக்கை அடைய வழி காட்டினார். இதன் மூலமாக இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

