ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி வெற்றிபெற 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் சுப்மன் கில் வெறும் 8 ரன்களிலும், அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து விராட் கோலி – ஸ்ரேயஸ் ஐயர் இணை சேர்ந்து இந்திய அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது.
விராட் கோலி அரைசதம்
ஸ்பின்னர்களை ஸ்ரேயஸ் ஐயர் மிக எளிதாக சமாளித்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் விராட் கோலியும் எந்த பரபரப்பும் இல்லாமல் ரன்களை சேர்த்தார். சிறப்பாக ஆடிய விராட் கோலி 53 பந்துகளில் அரைசதம் அடிக்க, 2வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது. சிறப்பாக ஆடிய அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஸ்ரேயஸ் ஐயர் 46 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
பின்னர் விராட் கோலி – அக்சர் படேல் இணை சேர்ந்து சிறப்பாக ஸ்கோர் செய்தது. அக்சர் படேல் ஸ்பின்னர்களை அட்டாக் செய்து சிக்ஸ், பவுண்டரி என்று விளாசினார். இதனை பயன்படுத்தி விராட் கோலியும் சில பவுண்டரிகளை அடித்தார். 4வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்க்கப்பட்ட போது அக்சர் படேல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ட்விஸ்ட் வைத்த விராட் கோலி
பின் இணைந்த விராட் கோலி – கேஎல் ராகுல் இணை நிதானமாக ரன்களை சேர்த்தனர். 39 பந்துகளாக பவுண்டரியே இல்லாமல் வெறும் சிங்கிளாக ஓடினர். அப்போது கேஎல் ராகுல் அதிரடிக்கு திரும்பிய போது, விராட் கோலி சிக்ஸ் அடிக்க ஆசைபட்டு 84 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 225 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது.
பின்னர் கேஎல் ராகுல் – ஹர்திக் இணை இணைந்து ரன்களை சேர்க்க, இறுதியாக 24 பந்துகளில் 27 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் வந்தது. அப்போது ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடிக்க, இந்திய அணியின் வெற்றி உறுதியானது. கடைசியாக 6 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற போது, ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். பின் கேஎல் ராகுலின் அபார சிக்ஸ் உடன் இந்திய அணி வென்றது. இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்திற்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

