இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராபி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் இன்று கோப்பையை அறிமுகம் செய்து வந்தனர். இது இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
சச்சின் – ஆண்டர்சன் டிராபி
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என்று சச்சின் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். கடைசியாக ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பின் ஒருமுறை கூட இந்திய அணியால் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை.
கடந்த முறை விராட் கோலி வெல்வதற்கு வாய்ப்பு கிடைத்த போதும், மழை மற்றும் பிசிசிஐ அரசியல் காரணமாக வாய்ப்பு நழுவியது. இந்த நிலையில் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு சச்சின் டெண்டுல்கர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். சச்சின் பேசும் போது, இந்த டெஸ்ட் தொடரில் நிச்சயமாக சுப்மன் கில் ஸ்பெஷலாக ஏதாவது செய்வார் என்று நம்புகிறேன்.
சுப்மன் கில்லுக்கு அட்வைஸ்
என்னுடைய அட்வைஸ் என்னவென்றால், யாருடைய கமெண்ட், விமர்சனத்தையும் பற்றியும் கவலைப்பட வேண்டாம். சில சுப்மன் கில்லின் கேப்டன்சி அட்டாக்கிங் பாணியில் இல்லை, தற்காப்பு பாணியில் இல்லை, முன்னெச்சரிக்கையாக இல்லை, களத்தில் சுறுசுறுப்பாக இல்லை என்று ஏராளமான விஷயங்களை சொல்லி கொண்டே இருப்பார்கள். ஆனால் சுப்மன் கில் ஓய்வறையில் என்ன நடக்கிறது, என்ன திட்டமிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
சுப்மன் கில் எடுக்கும் ஒவ்வொரு முடியும் இந்திய அணியின் நலனுக்காகவும், வெற்றிக்காகவும் இருக்க வேண்டும். வெளியில் வரும் கருத்துகளை வைத்து எந்த முடிவையும் எடுக்க கூடாது. இந்திய அணியின் 11 வீரர்களும் முழுமையாக தங்களின் கடமையை செய்ய வேண்டும். டாப் ஆர்டரில் மட்டுமல்லாமல், 6 அல்லது 7வது வரிசையில் வருவோரின் பங்களிப்பும் முக்கியமானது. நிச்சயமாக இந்திய அணி வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

