இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் இந்திய அணி வெற்றி பெற 193 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. எளிய இலக்கு என்பதால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். வழக்கம் போல் ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
கருண் நாயர் சொதப்பல்
இதில் ஆர்ச்சர் வீசிய ஓவரில் அட்டாக் செய்ய முயன்று ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் கேஎல் ராகுல் – கருண் நாயர் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. பிட்சில் நன்றாக ஸ்விங் எடுக்க, இங்கிலாந்து பவுலர்கள் உற்சாகம் ஆகினார்கள். பிரைடன் கார்ஸ் மாற்றி மாற்றி ஃபுல் லெந்தில் ஸ்விங் செய்ய, கருண் நாயர் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செய்ய தொடங்கியது. இதனை உணர்ந்த கவுதம் கம்பீர் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப்பை களமிறக்கினார். அவரின் பணி முழுக்க முழுக்க கேஎல் ராகுலின் விக்கெட்டை காப்பாற்றுவதற்காகவே அமைந்தது. இதனை மெசேஜாகவே கம்பீர் மீண்டும் மீண்டும் வீரர்கள் மூலம் அனுப்பி கொண்டே இருந்தார்.
இந்திய அணி தடுமாற்றம்
அதற்கேற்ப முதல் 2 பந்துகளிலேயே கேஎல் ராகுல் ஒரு ரன்னை எடுத்து எதிர்முனைக்கு சென்றுவிட்டார். அதேபோல் கடைசி ஓவரை வீச பென் ஸ்டோக்ஸ் வந்தார். அதிலும் முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்து மறுமுனைக்கு செல்ல, 3வது பந்தில் ஆகாஷ் தீப் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 4வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருக்கிறது.
இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்களும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவையாக உள்ளது. நாளைய ஆட்டத்தின் முதல் செஷனில் இந்திய அணி விக்கெட் கொடுக்காமல் நிதானமாக ஆடிவிட்டால், லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைக்க முடியும். அதேபோல் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என்று பலமான பேட்டிங் வரிசை இருப்பதால், ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

