இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா மண்ணில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி செயின் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியைப் பெற தென்னாபிரிக்க அணியும் களத்தில் போராடின. டாசை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து பின்னால் வந்த திலக் வர்மாவும் 10 ரன்களில் வெளியேற, இந்திய அணி 46 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சனும், மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுலும் சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டனர். சாய் சுதர்சன் 62 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து கேல். ராகுலும் 56 ரன்கள் ஆட்டம் இழக்க, பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட முடியாத காரணத்தினால் இந்திய அணி 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாபிரிக்க அணித் தரப்பில் பர்கர் 3 விக்கட்டுகளும், ஹென்றிக்ஸ் மற்றும் மகாராஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹென்றிக்ஸ் மற்றும் டானி டி ஜார்ஜி ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் தென்னாபிரிக்க அணி 43 ஓவர்களில் 215 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
இதில் டானி டி ஜார்ஜி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹென்றிக்ஸ் அரை சதம் அடித்தார். இதில் ஹர்ஸ்தீப் சிங் மற்றும் ரிங்கு சிங் மட்டுமே தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனால் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எனவே தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறுகையில்,
“நான் டாஸ் வென்று இருந்தாலும் பவுலிங் தேர்வு செய்திருப்பேன். முதல் பாதியில் இந்த ஆடுகளம் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இது பேட்டிங் செய்ய சற்று கடினமான ஆடுகளம் தான்.
இருப்பினும் நானும், சாய் சுதர்சனும் களத்தில் செட்டாகி விட்டோம். நாங்கள் இன்னும் கூடுதலாக 50 முதல் 60 ரன்களை எடுத்திருக்கலாம். நாங்கள் 240 ரன்கள் எடுத்திருந்தால் எதிரணிக்கு கடினமாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு தனி நபரின் விளையாட்டுத்திட்டம் மற்றும் அவர்கள் சுதந்திரமாக விளையாட வழிவகை அமைத்துக் கொடுக்க வேண்டும். நான் என்னால் முடிந்தவரை அணி வீரர்கள் சுதந்திரமாக செயல்படத் தகுந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கிறேன். கிரிக்கெட்டில் சரி, தவறு என்பது எதுவும் கிடையாது. நீங்கள் உங்கள் வீரர்களின் மீது நம்பிக்கை கொண்டு களத்தில் செயல்பட வேண்டும். முதல் 10 ஓவர்கள் எங்களுக்கு சற்று உதவியது. ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிப்போம்” என்று கூறினார்.

