297 ரன்.. 22 சிக்ஸ்.. இந்திய அணி இமாலய வெற்றி.. இவ்வளவு பேசியும் வெறும் கையுடன் திரும்பிய பங்களாதேஷ்.. 3வது டி20

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளை வென்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள உப்பல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். போட்டியின் தொடக்கத்திலேயே அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்தாலும் அதன் பிறகு களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். முதல் 6 ஓவர்களில் இந்திய அணி 82 ரன்களுக்கு 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்தது.

- Advertisement -

பவர் பிளே ஓவர்களுக்கு பிறகும் சஞ்சு மற்றும் சூரியகுமார் ஜோடி அதிரடியாக விளையாடியது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் மிகவும் அதிரடியாக விளையாடினார். 22 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்த அவர் பங்களாதேஷ் பந்துவீச்சாளர் ரிஷாட் உசேன் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டார். மேலும் இவருடன் அதிரடியாக விளையாடிய கேப்டன் சூர்யா குமார் யாதவும் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

இருவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 300 ரன்கள் குவிக்கும் நிலையில் இருந்தது. இந்நிலையில் சிறப்பாக ஆடிய சஞ்சீவ் சாம்சன் 40 பந்துகளில் டி20 சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் அதிவேகமாக டி20 போட்டிகளில் சதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சிறப்பாக விளையாடிய அவர் 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரும் சூரியகுமார் யாதவும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 72 பந்துகளில் 173 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.

சாம்சனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவரது விக்கெட்டிற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் ஹர்த்திக் பாண்டியா இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

இவருடன் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 13 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளுக்கு இடையே சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்தது. மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணி 25 பவுண்டரிகள் மற்றும் 22 சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணி அதிரடியாக ஆட நினைத்து அதன் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது.

அந்த அணியின் துவக்க வீரர் இமோன் பங்களாதேஷ் இன்னிங்ஸ் முதல் பந்திலையே மாயங் யாதவ் வேகத்தில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அந்த அணியின் மற்றொரு துவக்க வீரர் தன்சீத் ஹசன் 12 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் சாந்தோ 11 பந்துகளுக்கு 14 ரன்கள் எடுத்து ரவி பிஸ்னாய் பந்து வீச்சில் அவுட் ஆனார். அந்த அணியின் லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹீத் ஹிருதாய் ஆகியோர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 25 பந்துகளுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து இன்றைய போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் மஹ்முதுல்லாஹ் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 164 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒயிட் வாஷ் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்திய அணியின் பந்து வீச்சில் ரவி பிஸ்னாய் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் மாயங் யாதவ் 2 விக்கெட்களும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 10, டி20 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்திய அணி பத்தாவது முறையாக அணியை ஒயிட் வாஷ் செய்து டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles