இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருந்த போது தேவையில்லாமல் அந்த அணியின் 19 வயது வீரர் கோன்ஸ்டாஸ் பும்ராவை வம்பு இழுத்து பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கும் ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டிராவை பெற்றாலே இந்த தொடரை வென்று விடும். இந்திய அணியை பொறுத்தவரை இந்த டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இந்த சூழலில் இந்த போட்டியில் பும்ரா கேப்டனாக அணிக்கு தலைமை தாங்கினார். முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 185 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் விளையாடியது. ஆஸ்திரேலிய அணி மூன்று ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தின் கடைசி பந்தில் ஒரு டுவிஸ்ட் ஏற்பட்டது. அதாவது பந்தை எதிர்கொள்ள விரைவாக தயாராகுமாறு உஸ்மான் கவஜாவை பும்ரா வற்புறுத்தினார்.
அப்போது எதிர்முனையில் நின்று கொண்டிருந்த கோன்ஸ்டாஸ் பும்ராவை வம்புக்கு இழுத்தார். இதனால் கடுப்பான பும்ரா கோன்ஸ்டாசிடம் கோபமாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்ற இந்திய அணி வீரர்களும் கோன்ஸ்டாசை எதிர்க்க வந்தனர். இந்த சூழலில் உடனே நடுவர் தலையிட்டு இரு அணி வீரர்களையும் கலைந்து செல்ல வற்புறுத்தினர்.
இதனால் கோபத்தில் இருந்த பும்ரா கடைசி பந்தில் அபாரமாக வீசி உஸ்மான் கவஜாவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் கவஜா இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். உடனே ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் கோன்ஸ்டாசிடம் சென்று கத்தி வம்பு இழுத்தனர். தாம் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த கோன்ஸ்டாஸ் எதையும் பார்க்காமல் கோபமாக பெவிலியன் சென்றார்.
உஸ்மான் காஜாவும் அதிருப்தியில் சென்றார்.இதனால் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் உடன் முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. பும்ரா அமைதியாக இருந்த நிலையில் கோன்ஸ்டாஸ் தேவையில்லாமல் தவறு செய்து விட்டதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

