IND vs AUS.. 12 பந்தில் 43 ரன் தேவை.. மேக்ஸ்வெல் அதிரடியில் ஸ்தம்பித்த இந்திய அணி.. பிரசித் கிருஷ்ணா மோசமான சாதனை.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி அசாம் மாநிலம் குவாகாத்தியில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும் இஷான் கிஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், ருத்ராஜுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை ஆரம்பகட்ட சரிவிலிருந்து மீட்டது .

- Advertisement -

ருத்ராஜ் ஒருமுனையில் நிதானமாக விளையாட மறுமுனையில் தனது அதிரடியை காட்டினார் சூரியகுமார் யாதவ். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் எடுத்திருந்த சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து திலக் வர்மா களத்திற்கு ஆட வந்தார்.

- Advertisement -

திலக் வர்மா மற்றும் ருத்ராஜ் ஜோடி ஆஸ்திரேலியா அணியின் பந்துகளை அடித்து விலாசினர். மிகச் சிறப்பாக ஆடிய ருத்ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது நான்காவது அரை சதத்தையும் இந்தத் தொடரில் தனது இரண்டாவது அறை சதத்தையும் பூர்த்தி செய்தார். இதனைத் தொடர்ந்து இறுதி கட்டங்களில் மிகவும் அதிரடியாக விளையாடிய அவர் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இவரும் திலக் வர்மாவும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் 57 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இவருக்கு துணையாக விளையாடிய திலக் வர்மா 24 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 222 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் ஹார்டி பதினாறு ரன்னிலும் ஜோஸ் இங்கிலீஷ் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர் . எனினும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நாயகன் டிராவஸ் ஹெட் மேக்ஸ்வெல் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . ஹெட் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததை தொடர்ந்து மார்க்கஸ் ஸ்டாய்னீஷ் 17 ரன்னிலும் டீம் டேவிட் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

எனினும் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். சிறப்பாக விளையாடியவர் அரை சதம் எடுத்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றி நம்பிக்கைக்கு காரணமாக விளங்கினார். 18 பந்துகளுக்கு 49 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த போட்டி 6 பந்துகளுக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலைக்கு மாறியது. இறுதி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி எடுத்தார் வேட். இதனால் 5 பந்துகளுக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது .

இந்நிலையில் இறுதி ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுக்க மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். 4 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்த நான்கு பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரி எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பரபரப்பான போட்டியின் இறுதி ஓவரில் ஆஸ்திரேலியா 225 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிளன் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் விளையாடிய கேப்டன் வேட் 16 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக களத்தில் நின்றார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவி பிஸ்னாய் இரண்டு விக்கெட்டுகளும் அர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா இந்தத் தொடரில் தனது கணக்கை துவங்கி இருக்கிறது. இந்தப் போட்டியின் முடிவை தொடர்ந்து 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா நான்கு ஓவர்கள் பந்துவீசி 68 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். இது இந்திய டி20 வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளரால் கொடுக்கப்பட்ட அதிக ரன்கள் ஆகும். இந்தப் போட்டியின் மூலம் மோசமான சாதனையை படைத்திருக்கிறார் அவர். இறுதி ஓவரில் மட்டும் 21 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles