இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.
சிராஜ் பேட்டி
இந்திய அணியின் வீரர் ராகுல் 53 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். வழக்கமாக வெளிநாடுகளில் சிறப்பாக பவுலிங் செய்யும் சிராஜ், சொந்த மண்ணில் கொஞ்சம் சொதப்புவார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் சிராஜ் அசத்தி இருக்கிறார்.
இங்கிலாந்து தொடரில் இருந்த ஃபார்மை சிராஜ் அப்படியே பின்பற்றி வருவது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதன்பின் சிராஜ் பேசும் போது, க்ரீன் டாப் விக்கெட்டை பார்த்த போது, மிகவும் உற்சாகம் அடைந்தேன். இந்திய மண்ணில் இதுபோன்ற பிட்சை எளிதாக பார்க்க முடியாது. கடைசியாக பெங்களூர் மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இப்படியான பிட்சை பார்த்தேன்.
3 வாரங்கள் ஓய்வு
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகவும் சவால் நிறைந்ததாக அமைந்தது. அந்த டெஸ்ட் தொடர் எனது நம்பிக்கையையும் அதிகரித்தது. இங்கிலாந்து போன்ற வலிமையான அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் போது, இப்படியான நம்பிக்கை அதிகரிக்கும். அதனை இன்று பவுலிங் செய்யும் போது உணர்ந்தேன்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் 3 வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டேன். அதன்பின் மீண்டும் பயிற்சியை தொடங்கினேன். இந்திய ஏ அணிக்கு எதிராக ஆடிய போது, மீண்டும் ஃபார்மில் இருந்தேன். லக்னோ மிகவும் வெப்பம் நிறைந்த பகுதி. இந்த தொடருக்கு முன்பாக சிறப்பாக தயாராக இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டி உதவியது என்று தெரிவித்தார்.

