பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி எனத் தகவல். உலகின் 8 முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19 ஆம் நாள் துவங்கி நடைபெறுகிறது.
இவற்றில் இந்தியா பாகிஸ்தான் குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட போவதிலை என திட்டவட்டமாக அறிவித்தது. இதனை ஏற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) இந்திய அணியின் போட்டிகளை துபாயில் விளையாடுமாறு கேட்டுக்கொண்டது.
பாகிஸ்தான் வேண்டாம் என்ற பிசிசிஐ
இதை தொடர்ந்து நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியின் உடையில் தொடரை நடத்தும் நாடாக உள்ள பாகிஸ்தான் பெயரை பொறிக்கக் கூடாது என பிசிசிஐ கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது, இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.
இது குறித்து ஐசிசி கூறியதாவது “போட்டியின் லோகோவை தங்கள் ஜெர்சியில் சேர்ப்பது ஒவ்வொரு அணியின் பொறுப்பாகும். அனைத்து அணிகளும் இந்த விதிக்கு இணங்க கடமைப்பட்டுள்ளன” என்றனர்.
மேலும் ஐசிசி விதிமுறைகளின் படி தொடரை நடத்தும் நாட்டின் லோகோ மற்றும் பெயர் இல்லாமல் இருந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளிவருகிறது.
பிசிசிஐ vs பிசிபீ
சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையில் பல கசப்பான சம்பவங்கள் மற்றும் வார்த்தை போர்கள் நடந்த வண்ணம் உள்ளன.
முதலில் பாகிஸ்தான் நாட்டில் விளையாட விரும்பவில்லை என்றதில் தொடங்கி இப்போது ஜெர்சியில் பெயர் பிரச்சனை வரை தொடர்ந்து நீடிப்பதால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் அணி ஒரே பிரிவில் இடம்பெற்று பிப்ரவரி 23 ஆம் நாள் துபாயில் மோதுகிறது.
இதன் முன்பு, தொடரின் ஆரம்பத்தில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் திறப்பு விழாவுக்கு வருகை தருவார்கள்.இந்த விழா பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் செல்ல அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

