இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்க உள்ளது. பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில், இந்திய அணி ஒரு ஆல்ரவுண்டரை குறைத்துவிட்டு, கூடுதலாக ஒரு பவுலரை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதனை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏற்பாரா என்பதே கேள்வி.
ஹர்பஜன் சிங் பேட்டி
இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் பேசும் போது, பர்மிங்ஹாம் மற்றும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போதே சொல்லிவிட்டேன். குல்தீப் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று கூறினேன். ஏனென்றால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
குல்தீப் யாதவ் பவுலிங் அப்படி எளிதாக ரன்களை சேர்க்க முடியாது. ஏனென்றால் பந்து எந்தப் பக்கம் திரும்பும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மிஸ்ட்ரி பவுலராக இருந்து, முக்கியமான நேரங்களில் விக்கெட்டை கைப்பற்றக் கூடியவராக இருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பந்துக்காக காத்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் குல்தீப் யாதவிடம் அது நடக்கவே நடக்காது.
சாய் சுதர்சனுக்கு ஆதரவு
பிட்சில் எந்த உதவியும் இல்லையென்றாலும் குல்தீப் யாதவால் விக்கெட் எடுக்க முடியும். ஒருவேளை நான் பிளேயிங் லெவனௌஇ தேர்வு செய்ய வேண்டுமென்றால், நிதீஷ் குமார் ரெட்டியை நீக்கிவிட்டு, நேரடியாக குல்தீப் யாதவை கொண்டு வருவேன். அதேபோல் டாப் ஆர்டரில் ஒரு மாற்றத்தை செய்வேன். சாய் சுதர்சனுக்கு என் ஆதரவு நிச்சயம் இருக்கும்.
முதல் போட்டிக்கு பின் உடனடியாக சாய் சுதர்சன் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க கூடாது. அவருக்கு அதிக திறமை உள்ளது. அதனை களத்தில் விரைவாக செயல்படுத்தக் கூடியவர் என்று தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு பின் மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய அணி விளையாட இருப்பதால், வரலாறு படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

