இந்தியா – வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய வீரர்கள் அதிரடி மோடில் வெளுத்துக் கட்டினர். இதனைக் கண்ட முன்னாள் இங்கிலாந்து மைக்கல் வாகன் ட்டிட்டரில் நக்கலாக டுவீட் செய்ததை இந்திய ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.
கான்பூரில் நடந்துக் கொண்டுள்ள டெஸ்ட் போட்டி மழையால் 2½ நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கபட்டது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 233 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய மோமினுல் 107 * ரன்களில் ஆட்டமிழக்காமல் நின்றார்.
எஞ்சி இருக்கும் ஒன்றரை நாளில் மூன்று இன்னிங்ஸ் ஆடி வெற்றியைப் பெறுவது என்பது நடைமுறையில் சுலபமாக சாத்தியமில்லை. இருப்பினும் இந்திய அணி வெற்றியைத் தேடியே பயணித்தது. டி20ஐ போல அதிரடியாக துவங்கினர். 3 ஓவரிலயே 50 ரன்களை எட்டியது இந்திய அணி.
அதிவேக 50, 100, 150, 200, 250 என பல்வேறு சாதனைகளை தகர்த்தது. ஜெஸ்வால் 72, ராகுல் 68, கோஹ்லி 47, கில் 39 ஆகியோர் நிலைத்து விரைவாக ரன்கள் அடிக்க இந்திய அணி 34.3 ஓவர்களில் 8.22 ரன் ரேட்டில் 285/9 என்ற ஸ்கோரில் டிக்ளர் செய்தது. இந்த இன்னிங்சில் ஒரு மெய்டன் கூட ஆடாதது கடந்த 85 வருடங்களில் முதல் முறை நடக்கும் நிகழ்வு.
இந்திய அணியின் இந்த அதிரடி அணுகுமுறையைக் கண்ட மைக்கல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ” நான் இந்தியாவின் ஆட்டத்தில் பேஸ்பாலை உணர்கிறேன். ” எனப் பதிவிட்டார். பேஸ்பால் என்பது இங்கிலாந்து அணியில் பயிற்சியாளராக மெக்கல்லம் வந்த பிறகு டெஸ்ட்டில் இந்திகிலாந்தின் அதிரடி அனுகுமறையை குறிப்பது ஆகும்.
இங்கிலாந்து அணியுடன் ஒப்பிட்டு அவர்களைப் போல இந்தியா இருக்கிறார்கள் என கூறியதற்கு இதற்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அதாவது, டெஸ்ட்டில் இது போன்ற அதிரடி ஆட்டங்களை இங்கிலாந்து அணிக்கு முன் விவியன் ரிச்சர்ட்ஸ், ஷேவாக், மிஸ்பா உல் ஹக் செய்துவிட்டனர். அதனால் இங்கிலாந்து தான் இதற்கு முன்னோடி என வெட்டிப் பெருமையுடன் பேசக் கூடாது.
மேலும், இங்கிலாந்து அணி என்னதான் அதிரடியாக பேஸ்பால் ஆடினாலும் புள்ளிப் பட்டியலில் இலங்கைக்கு கீழே தான் உள்ளது. சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரைக் கூட இழந்துள்ளது எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் கலாய்த்து தள்ளினர் ரசிகர்கள்.

