2025 ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் இளம் நட்சத்திர வீரரான பிரித்வி ஷா எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. ரூ.75 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டாலும், எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
புலம்பிய பிரித்வி ஷா
இந்த சூழலில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மும்பை அணியை விட்டு வெளியேற பிரித்வி ஷா கடிதம் எழுதி இருக்கிறார். மற்ற மாநில அணிகளுக்காக விளையாட பிரித்வி ஷா முடிவு எடுத்துள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக வரும் காலங்களில் பிரித்வி ஷா விளையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக பிரித்வி ஷா பேசும் போது, என் வாழ்க்கையில் ஏராளமான தவறுகள் நடந்துவிட்டது. இதனை வெளியில் இருந்து பார்க்கும் நபர்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை. என்ன நடந்தது என்பதை நான் மட்டுமே அறிவேன். இதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் வாழ்க்கையில் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டேன். வாழ்க்கையில் சில மோசமான முடிவுகளை எடுத்திருக்கிறேன்.
தவறான நண்பர்கள்
முன்பெல்லாம் அதிகமாக பயிற்சியில் ஈடுபடுவேன். உதாரணமாக 3 முதல் 4 மணி நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபடுவேன். பேட்டிங் விளையாடி ஒருநாளும் சோர்ந்து போனதே இல்லை. அரை நாள் முழுக்க என்னால் மைதானத்தில் விளையாட முடியும். அதேபோல் வாழ்க்கையில் சில நேரங்கள் கவனத்தை சிதறவிட்டுவிட்டேன். தவறான மனிதர்களை நண்பர்களாக வைத்து கொண்டேன்.
ஏனென்றால் வாழ்க்கையின் உச்சியில் இருந்தேன். அந்த நேரத்தில் நண்பர்கள் உருவாகினார்கள். அவர்கள் என்னை எங்கெங்கோ அழைத்து சென்றுவிட்டார்கள். அங்கிருந்து என் பாதை மாறிவிட்டது. அதுமட்டுமல்லாமல், என் குடும்பத்திலும் சில பிரச்சனைகள் இருந்தன. என் தாத்தா தவறிவிட்டார். அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அந்த பிரச்சனைகள் அனைத்தையும் சொல்ல முடியாது. ஆனால் உணர முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

