சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் பிரபலமானது. கடந்த சில வருடங்களாக இந்த தொடருக்கு இணையாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் தொடரும் பிரபலமடைந்திருக்கிறது. கிரிக்கெட் உலகில் வலிமையான அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சம் இருக்காது.
அதே நேரத்தில் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் ஸ்லெட்ஜிங் யுத்திக்கும் இந்திய வீரர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வருகின்ற நவம்பர் மாதம் தொடங்கி 2025 ஆம் வருடம் ஜனவரி மாதம் முடிவடைய இருக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்திய அணி கடந்த 2 சுற்றுப்பயணங்களின் போதும் ஆஸ்திரேலிய அணியை அவர்கள் மண்ணில் வீழ்த்தி இருக்கிறது. இந்த முறை இந்திய அணிக்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இடையேயான வார்த்தை போர் தொடங்கி விட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் இந்த முறை இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட்டை அடக்குவேன் என தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் கடந்த சுற்றுப்பயணங்களில் டெஸ்ட் போட்டிகளின் போது ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2020 ஆம் வருட இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் அவர் ஆடிய இன்னிங்ஸ் டெஸ்ட் போட்டி வரலாற்றில் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்த பண்ட் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் போது ரிஷப் பண்டை அடக்குவேன் என லயன் சவால் விட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இந்த முறை ரிஷப் பண்டிற்கு எதிராக திட்டங்கள் வைத்திருக்கிறேன். அவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன். அவர் களத்தில் இருக்கும்போது சிறிது தவறாக பந்து வீசினாலும் அதனை சிக்ஸருக்கு அனுப்பி விடுவார். எனவே அவருக்கு எதிராக பந்து வீசும் போது துல்லியம் அவசியம். இந்த முறை அவருக்கு எதிரான போட்டியில் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். அதற்கு எதிரான திட்டம் என்னிடம் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் .
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ரிஷப் பண்ட் என்னுடைய பந்துவீச்சில் சிக்ஸர் அடிப்பது பற்றி எனக்கு கவலையோ, அச்சமோ இல்லை. அவர் தனது கிரீசிலிருந்து ஆடுமாறு அதிகமான பந்துகளை வீசுவேன். அவர் எனது பந்துவீச்சில் அதிரடி ஆட்டத்தை ஆடாமல் தற்காப்பு ஆட்டத்தை ஆட வைப்பேன். இதன் மூலம் அவரை அவுட்டாக்குவேன் என லயன் தெரிவித்திருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே சுழற் பந்துவீச்சாளர் லயன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு எதிராக மட்டும் 121 விக்கெட்டுகளை அவர் எடுத்திருக்கிறார்.

