சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளது. துபாய் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2000ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
25 வருட வரலாறு
இதனால் 25 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை துபாய் மைதானத்தில் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் விளையாடி இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்ற பிட்சிலேயே இறுதி போட்டியும் நடக்கவுள்ளது.
இதனால் இம்முறை இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை ஒரேயொரு மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.
பிளேயிங் லெவன்
அதன்பின் கடைசி லீக் போட்டியில் மட்டுமே 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் வரிசை எப்படி அமையும் என்று விவாதம் நடந்து வருகிறது. முகமது ஷமி நிச்சயம் இருந்தாலும், ஹர்தித் ராணா சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மற்றபடி இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொறுத்த வரை சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என்றே அமையும். ஒருவேளை இடதுகை பவுலரான ஓரூர்க் மற்றும் சான்ட்னர் இருவரையும் சமாளிக்க ரிஷப் பண்ட் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

