இந்திய கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தது. அதில் குறிப்பாக ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தார்.
பேட்டிங்கில் 28 பந்துகளை எதிர்கொண்ட பாண்டியா அதிரடியாக விளையாடி 59 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். மேலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர், ஒரு விக்கெட் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் தான் மீண்டும் இந்திய அணியில் திரும்பி வந்த விதம் குறித்து பாண்டிய தனது எண்ணங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “நீங்கள் ஒரு ராக் ஸ்டார் போல இருக்க வேண்டும். நீங்கள் மைதானத்தில் ஒரு பத்து நிமிடம் பர்பாமன்ஸ் பண்ணினாலும் உங்களை பார்த்து கூட்டம் கத்த வேண்டும். அதுதான் எனக்குப் பெரிய உந்து சக்தி. என் மீது நிறைய எலுமிச்சம் பழங்களை தூக்கி எறிந்தாலும் அதை லெமனேடு செய்யத்தான் முயற்சித்து இருக்கிறேன். என்னை நானே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள்?. நான் முன்பை விட பலமாகவும் சிறப்பாகவும் திரும்பிவர வேண்டும். அதுவே எனது எண்ணம்” என்று பேசி இருக்கிறார்.

