இந்திய அண்டர் 19 அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி விராட் கோலி செய்ததை விட பெரிய சாதனையை செய்திருக்கிறார் என ஹர்பஜன் சிங் பாராட்டி பேசி இருக்கிறார். நேற்று அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வைபவ் சூரியவன்சி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த நிலையில் வைபவ் சூரியவம்சி குறித்து பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “வைபவ் சூரியவன்சி மிகப்பெரிய வீரராக வருவார். அவர் அண்டர் 19 கிரிக்கெட்டில் மட்டும் 25 போட்டிகளில் 1412 ரன் எடுத்து இருக்கிறார். விராட் கோலி, கில் ஜெய்ஸ்வால் என எந்த பெரிய வீரரும் இதை செய்தது கிடையாது. இந்த பட்டியலில் தற்போது இவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது”
“தற்போது இவருக்கு 14 வயது ஆகிறது. மார்ச் மாதம் வந்தால் 15 வயது தொடங்கிவிடும். சர்வதேச அணிக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 15 வயது ஆகி இருக்க வேண்டும். எனவே இவர் அந்த தகுதியை எட்டியதுமே இந்திய அணிக்கு வந்து விடுவார் என்று நான் நம்புகிறேன். சச்சின் டெண்டுல்கர் குறைந்த வயதில் இந்திய கிரிக்கெட் வந்து மிகப்பெரிய சாதனைகளை செய்தார். இவரும் அதையெல்லாம் செய்ய முடியும். இவரைப் போன்ற ஒரு குழந்தையைப் பெற்று திறமையுடன் வளர்த்ததற்கு அவருடைய பெற்றோர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

