சில நாட்களுக்கு முன்பாக அஸ்வினின் யூடியூப் சேனலில் சிஎஸ்கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வரப் போகிறார் என்று தெரிவித்திருந்தனர். குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் மூலமாக சிஎஸ்கே அணி பெற உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக சிஎஸ்கே அணி நிர்வாகிகள் முடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
கடந்த சீசனில் குஜராத் அணிக்காக விளையாடும் வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் முழுமையாக பெற முடியவில்லை. அவரை பிளேயிங் லெவனிற்குள் கொண்டு வருவதே நெஹ்ரா – சுப்மன் கில் கூட்டணிக்கு சிக்கலாக இருந்தது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாய்ப்புகளில் வாஷிங்டன் சுந்தர் அசத்தலாக விளையாடி வந்தார்.
தற்போது இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 வடிவங்களிலும் நிரந்தர இடத்தை பிடித்திருக்கிறார். இப்படியான சூழலில் ஆஷிஷ் நெஹ்ராவிடம் வாஷிங்டன் சுந்தர் டிரேட் குறித்து கேள்வி கேட்கும் போது மொத்தமாக மறுத்துள்ளார். இதனால் வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்லப் போவதில்லை என்று பார்க்கப்படுகிறது.

