வரும் அக்டோபர் 16ஆம் தேதி இந்தியா – நியூஸிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் துவங்குகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கவுதம் கம்பீர் விராட் கோலி பற்றியும் வருங்கால கிரிக்கெட் குறித்தும் பேசினார்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பதிவியேற்று இருக்கும் கம்பீர் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அண்மையில் நடந்த வங்கதேச டெஸ்ட் & டி20ஐ தொடரில் அபார வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி. எனினும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறித்து கம்பீரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு கம்பீர், ” விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட்டர், பல ஆண்டுகளாக சிறப்பாக பங்காற்றியுள்ளார். துவக்க காலத்தில் இருந்த அதே ரன்கள் பசி அவரிடம் இன்னுமும் இருக்கிறது. அவர் ரன்கள் அடிக்கத் துவங்கிவிட்டால் போதும், பிறகு தொடர்ந்து சீராக ஆடுவார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சீரிஸில் அவர் இதைச் செய்வார் என நான் நம்புகிறேன். ” என்றார்.
அடுத்ததாக கம்பீர் கிரிக்கெட் அணுகுமுறை குறித்து கருத்தைப் பதிவு செய்தார். அவர் கூறியதாவது, ” இது பந்து வீச்சாளர்களுக்கான காலம். முதலில் பேஸ்மேன்கள் மேல் அதிக ஈர்ப்பு காட்டும் எண்ணத்தை மாற்ற வேண்டும். பேட்ஸ்மேன்கள் பணி ரன்கள் அடித்து செட் செய்வதோடு முடிந்துவிடும். பந்து வீச்சாளர்கள் தான் தொடர்களை வென்றுத் தருவார்கள். “
மேலும், ” பேட்ஸ்மேன்கள் 1000 ரன்கள் அடித்தாலும் அந்த டெஸ்ட் போட்டியை அவர்கள் வெல்வார்கள் என்பதில் எந்த நிச்சயம் இல்லை. ஆனால் பவுலர்கள் 20 விக்கெட்டுகள் எடுத்தால் அந்த டெஸ்ட் போட்டியை வெல்வது 99% சதவீதம் உறுதி. இது டெஸ்ட் போட்டிக்கு மட்டும் அல்ல அனைத்து வடிவக் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். அதனால் வரும் காலத்தில் நாம் பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சாளர்களை அதிகம் கொண்டாட வேண்டும். நம் எண்ணமும் மாறும் என நம்புகிறேன். ” என்றார் கம்பீர்.

