தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து முடிவடைந்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதை நோக்கி அனைத்து கிரிக்கெட் நாடுகளும் தங்களது தயாரிப்புகளை ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியா அடுத்தடுத்து இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளுக்கு சுற்று பயணம் செய்கிறது. தற்போது இந்த நான்கு நாடுகளும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வித்தியாசமான கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
தற்போது இந்திய ஒருநாள் அணியில் மட்டுமே நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடி வருகிறார்கள். இவர்கள் கடைசி கட்டத்தில் விளையாடுவதோடு சிறப்பாகவும் விளையாடி வருவதால், இவர்கள் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் பெரிய அளவுக்கு மைதானத்திற்கு வருகிறார்கள்.
எனவே மேற்கண்ட நான்கு கிரிக்கெட் வாரியங்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தங்களுடைய சுற்றுப்பயண அட்டவணையில் ஒருநாள் போட்டிகளை அதிகரித்து நடத்த வேண்டும் என கேட்டு இருக்கின்றன. அதாவது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5 போட்டிகள் கொண்டதாக நடத்த கேட்டிருக்கின்றன. தற்போது இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

