ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலுக்கு மூன்றாவது நடுவர் கொடுத்த அவுட் ஆனது இப்பொழுது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
84 ரன்களில் இருந்த ஜெய்ஸ்வாலுக்கு, 71-வது ஓவரில் பாட் கம்மின்ஸ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து வீசினார், அப்பொழுது பந்தை ஜெய்ஷ்வால் அடிக்க முயன்ற பொழுது பந்தானது ஜெய்ஷ்வாலின் கையுறைக்கு அருகாமையில் சென்று விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
உடனே ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர் உட்பட அனைத்து வீரர்களும் அப்பீல் செய்யத் தொடங்கினர். ஆனால், மைதானத்தில் இருந்த நடுவர்கள் நாட் அவுட் கொடுத்ததும், உடனே கம்மின்ஸ் சற்றும் யோசிக்காமல் மறுபரிசீலனை கோரினார். மூன்றாவது நடுவரும் ஸ்னிக்கோமீட்டரின் உதவியுடன் பந்து மற்றும் கையுறைகளின் தொடர்பைப் பார்த்தார், ஆனால் அதில் எந்த அசைவும் தெரியவில்லை. இருப்பிலும் அவர் ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுத்தார்.
இந்த முடிவானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மூன்றாவது நடுவரின் தீர்ப்பு சரிதான் என்று ஐசிசி எலைட் பேனல் நடுவர் சைமன் டஃபல் கூறியுள்ளார்.
அவர் சரியான முடிவே எடுத்தார்:
சைமன் டஃபல் சேனல் 7 ஒன்றில் கூறியதாவது, “இந்த தொழில்நுட்ப நெறிமுறைகளுடன், மைதானத்தில் இருக்கும் நடுவர்களுக்கும் வீரர்கள் அவுட்டா இல்லையா என்று தீர்ப்பை வழங்குவதற்கு அனைத்து உரிமை உண்டு, எனவே அவர்கள் பந்தானது கையுறையில் பட்டு உரசி போவதை பார்த்துவிட்டார்கள் என்றால் அவர்களின் வழக்கை நிரூபிக்க எந்த ஒரு தொழில்நுட்பமும் தேவையில்லை.
ஆனால், அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதில் ஏதேனும் ஒரு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் அல்லது வீரர்களும் மூன்றாவது நடுவர்களின் வழக்கை நாடலாம். அதேபோல் இந்த வழக்கின் தீர்ப்பானது மூன்றாவது நடுவர்களிடத்தில் செல்கிறது, அவர் தெளிவான விளக்கத்தை பார்க்க இரண்டாவது தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அதுதான் ஸ்னிக்கோமீட்டர். ஆனால் அந்த ஸ்னிக்கோமீட்டரானது தெளிவான விளக்கத்தை கொடுக்காத பட்சத்தில் இந்த முடிவானது மூன்றாவது நடுவரின் கைகளில் செல்லும், அவர் கையுறையில் பந்து பட்டதா இல்லையா என்று கவனித்து தனது இறுதி முடிவை கொடுப்பார்.
அதேபோல், இந்த போட்டியிலும் மூன்றாவது நடுவர் சரியான தீர்ப்பை வழங்கினார். தெளிவான தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மைதானத்தில் இருக்கும் நடுவர்களின் தீர்மானத்தை மாற்றினார். எனவே, என் பார்வையில் சரியான முடிவு எடுக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

