இந்திய அணியின் கேப்டன் மற்றும் துவக்க வீரரான ரோஹித் சர்மாவின் சமீபத்திய ஃபார்ம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் அவர் அடுத்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஓப்பனிங் இடத்தை விட்டு விலக வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா பேசியுள்ளார்.
அண்மையில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா 0-3 என படு மோசமாக விளையாடி வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்தில் ஒயிட் வாஷ் ஆனது. இதில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு சீனியர் வீரர்களின் பேட்டிங்கும் பெரிய ஏமாற்றம். இந்தியாவில் நடந்த கடைசி 10 இன்னிங்சில் ரோஹித் ஷர்மா வெறும் 133 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும்.
வங்கதேச அணிக்கு எதிராக 6, 5, 23, 8 மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2, 52, 0, 8, 18, 11 என ரன்களில் வெளியேறி ரோஹித் ஷர்மா மிகப் பெரிய ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் கூட ரோஹித் ஷர்மா அதிரடியைக் கையில் எடுப்பது பெரிய ஃபிளாப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் தினறியுள்ளார்.
இது பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியதாவது, ” ரோஹித் ஷர்மா ஒப்பராக தொடர்ந்து விளையாட சரியாக இருப்பாரா என ஆலோசனை செய்யுங்கள், இல்லையென்றால் அவரின் இடத்தை உடனே மாற்றுங்கள். சமீபத்தில் அவர் வேகப்பந்து வீச்சாளர் சவுதியிடம் தடுமாறினார். ஆஸ்திரேலியாவில் இதை விட அதிகமான ஆதிக்கத்தை வேகப்பந்து வீச்சாளர்கள் காட்டுவார்கள். அதனால் ரோஹித் ஒரு இடம் கீழே இறங்கி ஒன் டவுனில் ஆடுவது நல்லது. ” என அறிவுரை வழங்கியுள்ளார்.
” இந்திய அணியின் ஒப்பனர்களாக ஜெஸ்வால் – கில் விளையாட வேண்டும். அதன் பிறகு ரோஹித், பின்னர் கோலி களமிறங்க வேண்டும். அஷ்வின், ஜடேஜா வரை பேட்டிங் பெரிதாக இருப்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்று. அனைவரது இடத்தையும் கம்பீர் நிர்வாகித்து முடிவு செய்ய வேண்டும். ” என்றார்.

