இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இந்த ஓய்வு முடிவு பல முன்னாள் வீரர்களிடையே ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அஸ்வின் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான வீரராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தனது ஓய்வினை அறிவித்தார். அஸ்வினுக்கு தற்போது 38 வயதாகும் நிலையில் அவருக்கு மாற்று வீரராக வந்துள்ள வாஷிங்டன் சுந்தர் அவ்வப்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால் ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று அஸ்வின் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும் என்ற தகவல் வெளிவந்த நிலையில் ஹர்பஜன் சிங் எனக்கும் அஸ்வினுக்கும் இடையே எந்த விதமான கருத்து வேறுபாடு வந்தாலும் அது குறித்து நான் அஸ்வினிடமே நேரடியாக கேட்பேன் எனவும், ஆனால் இதுவரை அவருக்கும் எனக்கும் அதுபோல எந்த விதமான கருத்து வேறுபாடும் வந்ததில்லை என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் விரிவாக கூறும்போது “நான் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பதில்லை. எனக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு வந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ அது குறித்து நான் அவரிடமே நேரடியாக கேட்பேன். ஆனால் இதுவரை அவருக்கும் எனக்கும் இடையே அது போன்று எந்த ஒரு கருத்து வேறுபாடும் வந்ததில்லை. அவர் இந்திய அணிக்கு அற்புதமான பந்துவீச்சாளராக இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க:கவாஸ்கர் லெஜெண்ட் தான்.. ஆனா கோலியை இப்படி விமர்சனம் செய்வது நியாயம் அற்றது – கோலியின் சிறுவயது கோச் பேட்டி
அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் உள்ளது. நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக ஊடகங்களில் நான் கூறுவதை திரித்து அது அஸ்வினுக்கு எதிரானது என்று மக்கள் கூறினால் அது அவர்களுடைய பார்வை. நான் ஆடுகளம் பேட்டிங் செய்யவும் சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அப்படி எதுவும் சரியாக அமையாமல் போனால் நான் குரல் கொடுப்பேன். போட்டி இரண்டரை நாட்களில் முடிவடையும் போது நான் அதற்கு எதிராக பேசியிருக்கிறேன்” என்று ஹர்பஜன் சிங் பேசி இருக்கிறார்.

