இந்திய அணி சமீபத்தில் நடந்த முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1 – 3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து நிலையில், மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை குறித்தான கேள்விகள் சமூக வலைத்தளங்களில் உலாவி வந்தது.
இந்நிலையில், முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நெருங்கிய நண்பர்கள் ஆகிய இரு வீரர்களைப் பற்றியும் மனந்திருந்து பேசி உள்ளார்.
அவர்கள் என் குடும்பம், யுவராஜ்:
முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியதாவது, “இவர்கள் இருவரும் என்னை விட அதிகமாக கிரிக்கெட் விளையாடியுள்ளனர். எனவே, நான் எனது கருத்தை மட்டுமே கூற முடியும், அதாவது கிரிக்கெட் வீரர்கள் தனது ஆட்டத்தில் சரிவர செயல்படாதபோது அவர்களை விமர்சிப்பது மிகவும் எளிதானது. ஆனால், அவர்களை ஆதரிப்பது என்பது மிகவும் கடினம். ஊடகங்களின் வேலையே அவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது தான், எனது வேலை எனது நண்பர்கள் மற்றும் எனது சகோதரர்களுக்கு ஆதரவளிப்பது. என்னைப் பொறுத்தவரை அவர்கள் என் குடும்பம்.
சொந்த நாட்டில் தோல்வி பெற்றது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை:
என் கருத்துப்படி, நியூசிலாந்துக்கு ஏற்பட்ட தோல்வியே என்னை அதிகமாக பாதிக்கிறது, ஏனெனில் அந்தத் தொடரானது நமது நாட்டில் நடைபெற்ற தொடராகும். எனவே அந்தத் தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியும், ஏனெனில் நாம் ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை வென்ற பின்னரே இங்கு தோல்வியடைந்துள்ளோம். கடந்த பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா ஒரு ஆதிக்கமான அணியாக இருந்து வந்துள்ளது,”
அவர்களின் சாதனைகளை யோசித்துப் பாருங்கள்:
“கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இந்தியா எய்திய சாதனைகளையே நான் பார்ப்பேன். அவர்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றனர். வேறு எந்த அணியும் இந்த சாதனைகளை செய்ததா என்று எனக்கு நினைவில்லை. மக்கள் ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற நமது ஜாம்பவான்கள் முந்தைய காலங்களில் செய்த சாதனைகளை மறந்துவிட்டு அவர்களை மோசமாக பேசுகிறோம்.
அவர்கள் காலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். ஆம், அவர்கள் தோல்வியடைந்தாலும், அதை நம்மை விட அவர்களே அதிகமாக வருத்தப்படுவார்கள். இந்திய அணி இந்தத் தோல்விகளில் இருந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டு வரும்.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராகவும், அஜித் அகர்கர் தேர்வாளராகவும்; ரோகித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் – இப்போது கிரிக்கெட் உலகில் தலை சிறந்த வீரர்களாகவும் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு என்ன வழி என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். இது குறித்து பிசிசிஐயுடன் விவாதிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று யுவராஜ் கூறினார்.

