இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கௌதம் கம்பீர் இந்திய அணியை போதிய அளவிற்கு தயார் செய்திருப்பார் என்று தெரிகிறது. மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த கௌதம் கம்பீர், ஐபிஎல் உரிமையாளர்கள் அவர்களது வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும் எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
அதாவது இந்திய அணியின் டெஸ்ட் தோல்விக்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான பாரத் ஜிண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று ட்வீட் செய்திருந்த நிலையில் கௌதம் கம்பீர், பாரத் ஜிண்டாலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார்.
ஆனால் இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் போது “கௌதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசுவார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அனைவரையும் பகைத்துக் கொள்ள கூடாது என்று தான் கூறுகிறேன். செய்தியாளர் சந்திப்பில் பாரத் ஜின்டால் குறித்து பேசி இருப்பது சரியானது அல்ல என்று தோன்றுகிறது. நீங்கள் இப்படி பேசினால் மக்கள் உங்களது வீழ்ச்சியை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். நீங்கள் எப்போது வீழ்வீர்கள் என்று பார்க்கத் தொடங்குவார்கள் எனவே அதற்கு நீங்களே இடம் கொடுக்கிறீர்கள்” என்று பேசி இருக்கிறார்.

