இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது.
வெற்றிக்காக இந்திய அணியினர் அனைவருமே சிறப்பாக செயல்பட்ட நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு குறிப்பிட்ட இந்திய வீரர் ஒருவரை பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். ரிஷப் பண்ட் தொடங்கி சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ரோஹித் சர்மா கடைசி போட்டியில் விராட் கோலி என அனைத்து இந்திய வீரர்களுமே இந்த உலகக் கோப்பைக்காக தனித்தனியான போட்டிகளில் வென்று கொடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையை ஆக்ரோஷமான அணுகுமுறையோடு எதிர்கொண்டது.
அதிலும் குறிப்பாக ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் என்பது மிகச் சிறப்பான வகையில் அமைந்திருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வி, சொந்த வாழ்க்கையில் பிரச்சனை என பல்வேறு மன அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த உலகக் கோப்பை தொடரை எதிர்கொண்டார். ஆனால் அவை அத்தனையும் மறந்து நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி தற்போது உலகக் கோப்பையை ஏந்துவதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறும் பொழுது “தற்போது ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பான முறையில் இருக்கிறார். நல்ல முறையில் வலுவாக திரும்பி இருக்கிறார். தற்போது இந்தியாவில் அவரை எதிர்த்து முழக்கம் இட ஒருத்தருக்கு கூட தைரியம் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி யாராவது இருந்தால் உலகக்கோப்பையில் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள்.
நானும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து மாநில அணிக்காக விளையாடுகிறோம். பாண்டியா உண்மையிலேயே அற்புதமான நல்ல ஒரு மனிதர் . அதனால்தான் அவரால் அனைத்து பிரச்சினைகளையும் கடந்து வர முடிந்தது. சில மாதங்களுக்கு முன்பாக அவர் எப்படியான சூழ்நிலையில் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து அவர் மீண்டு வந்த விதம் உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.
இதையும் படிங்க:ஏங்க விராட் கோலி எப்படிப்பட்ட பிளேயர்.. அவர இவர் கூட போய் கம்பேர் பண்றீங்களே- அகமது ஷேஷாத் பேட்டி
தற்போது பாண்டியா ஒரு உலக சாம்பியன் வீரர். அவர் இப்போது மட்டுமல்ல நீண்ட காலமாகவே இந்தியாவிற்காக மேட்ச் வின்னர் ஆக திகழ்ந்து இருக்கிறார். பைனலில் அவர் தென் ஆப்பிரிக்க வீரர் க்ளாசன் விக்கெட்டை எடுத்து போட்டியை வெற்றிகரமாக முடிப்பார். அப்போது அவரது உணர்ச்சிகளை பார்த்தாலே அனைத்தும் புரியவரும்” என்று கூறி இருக்கிறார். ரோகித் சர்மாவின் ஓய்விற்கு பிறகு தற்போது பாண்டியாதான் டி20 தொடருக்கு கேப்டனாக இருக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

