இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 371 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயித்தும், இந்திய அணி தோல்வியை அடைந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில், தோல்வியுடன் தொடங்கி இருக்கிறார்.
சுப்மன் கில் பேட்டி
அதேபோல் 5 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசிய போதும், இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி குறித்து சுப்மன் கில் பேசும் போது, மிகச்சிறந்த டெஸ்ட் போட்டியாக அமைந்தது. கேட்ச்களை கோட்டைவிட்டதும், கீழ் வரிசையில் பங்களிப்பு இல்லாததும் எங்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 430 ரன்களை இலக்காக கொடுக்கலாம் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது.
ஆனால் கடைசி சில விக்கெட்டுகள் 25 ரன்களுக்குள் வீழ்ந்துவிட்டது. இன்றைய ஆட்டத்தில் கூட எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட சொதப்பலை நினைத்து பார்த்தேன். அதனை வரும் காலங்களில் சரி செய்ய வேண்டும். இதுபோன்ற பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் தவறு செய்து பெரிய விஷயம். அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது.
பும்ரா விளையாடுவாரா?
ஒரு இளம் அணியாக விரைவாக முன்னேறுவோம் என்று நினைக்கிறேன். முதல் செஷனில் விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும், பவுலிங் திட்டமிட்டபடி இருந்தது. அதிக ரன்களை விட்டுக் கொடுக்கவில்லை. ஏனென்றால் பந்து பழதாக மாறிய பின், ரன்களை கட்டுப்படுத்த முடியாது. ஜடேஜா மிகச்சிறப்பாக பவுலிங் செய்து வாய்ப்புகளை ஏற்படுத்தினார்.
பும்ரா எந்தப் போட்டியில் விளையாடுவார் என்பதை ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவே முடிவு செய்வோம். அடுத்தப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. அந்த போட்டிக்கு முதல் நாளன்று முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செய்து வரும் நிலையில், பும்ரா அடுத்தப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

