2025 ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் முன் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதைப் பற்றிய அறிவிப்பை இன்னும் ஓரிரு நாளில் பிசிசிஐ வெளியிடவுள்ளது. ஆனால் அதற்கு முன்பே செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளன.
அதன்படி அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 5 வீரர்கள் வரைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதில் 3 இந்தியர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். வழக்கமாக 3 வீரர்கள் தக்க வைத்துக் கொண்டு 2 ஆர்.டி.எம் கார்டு வழங்கப்படும். இம்முறை நேரடியாக 5 வீரர்கள் வரை அணியில் வைத்துக் கொள்ளும் சலுகை கொடுக்கபட்டுள்ளதால் ஆர்.டி.எம் கார்டு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகளுக்கு தாங்கள் வளர்த்த இந்திய வீரர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் இது மிகவும் உபயோகமாக இருக்கும். இருப்பினும் பல நட்சத்திர வீரர்கள் ஏலத்திற்கு வருவர். அதில் மிக முக்கியமாக பெங்களூர் அணியில் இருந்து 2 தரமான வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுகிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கம் தான் ஜாஸ்தி. இந்திய வீரர்களை மீது பணத்தைத் போட்டு தக்க வைத்துக் கொண்டு விளையாடலாம் என்று நம்ப மாட்டார்கள். அதனால் இன்றளவும் இந்திய வீரர்கள் பற்றாக்குறை அவர்களுக்கு உள்ளது நடப்பு பெங்களூர் அணியில் 4 தரமான வெளிநாட்டு வீரர்கள் அணியைத் தாங்கி பிடித்துள்ளனர். அவர்கள் கேப்டன் டூ பிளசிஸ், மேக்ஸ்வெல், கிரீன், ஜாக்ஸ். கடந்த சீசனில் துவக்கத்தில் மிக மோசமாக செய்து இருந்தாலும் தரமான கம்பேக் கொடுத்து பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
இதில் மேக்ஸ்வெல் தவிர மற்ற அனைத்து வெளிநாட்டு வீரர்களும் சிறப்பாக செய்தனர். அதற்கு முந்தைய சீசனில் சிறப்பாக செயல்பட்ட மேக்ஸ்வெல் கடந்த முறை ஃபார்ம் அவுட் ஆகி ரன்கள் சேர்க்க இயலாமல் அவதிப்பட்டார். ஆர்.சி.பி அணி இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரஜத் பட்டிதார், சிராஜ் மூவரை நிச்சயம் எடுக்கும். வெளிநாட்டு வீரர்கள் எந்த இரண்டு வீரர்கள் என்ற குழப்பம் நிச்சயம் வரும். இதுவரை கிடைத்த செய்திகளின் படி பெங்களூர் அணி இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியன் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இருவரையும் தக்க வைத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது.
இளம் வீரர்களாக இவர்கள் இருவரையும் அணியில் வைத்துக் கொள்வது தான் சரியான முடிவும் கூட. கடந்த 3 சீசன்களாக சிறப்பாக வழிநடத்திய கேப்டன் டூ பிளசிஸ் நடையைக் கட்டும் சூழலில் உள்ளார். அவரின் வயது மற்றும் மற்ற லீகில் அவர் ரன்கள் சேர்க்கத் தடுமாறுவது அனைத்தும் வைத்து தான் இந்த முடிவுக்கு வந்து இருப்பர். இரண்டாவதாக மேக்ஸ்வெல்லை விடுவதற்கு காரணம் கடந்த முறை அவர் சுதப்பியது தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. போதிய இடம் இல்லதாதல் தான் அவர் வெளியேற்றப்படுகிறார். முடிந்தால் ஏலத்தில் விட்டு மீண்டும் இவரை எடுக்க ஆர்.சி.பி முயற்சி செய்யலாம். ஜேக்ஸ் & கிரீன் இருவரைக் காட்டிலும் மேக்ஸ்வெல்லை விட்டுப் பிடிப்பது சுலபம்.

