இன்று மும்பை மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனல் போட்டி துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி இரண்டாவதாக பந்து வீச உள்ளது.
மும்பை மைதானத்தை பொருத்தவரையில் இரவு நேரம் ஆக ஆக பனிப்பொழிவு வரும். இதனால் இரண்டாவது பந்து வீசுவது என்பது எப்பொழுதும் பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இதுகுறித்த கருத்தை ஏற்கனவே இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது பந்து வீச இருப்பது தங்களுக்கு சாதகமான விஷயம் தான் என சூரியகுமார் யாதவ் வித்தியாசமான கருத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் ரேகான் அகமதுக்கு பதிலாக ஜெமி ஓவர்டன் இடம் பெற்று இருக்கிறார்.
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “நாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் முதலில் பேட்டிங்தான் செய்திருப்போம். ஏனென்றால் இது மிகப்பெரிய செமி பைனல் போட்டி. நாம் அழுத்தம் இல்லாமல் முதலில் பேட்டிங் செய்யலாம். மேலும் தற்பொழுது பெரிய அளவில் காற்று அடித்து வருவதால் இரவில் பனிப்பொழிவு வராது. மேலும் ஆடுகளத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள், அதற்கு எனது பாராட்டுகள்” என்று கூறி இருக்கிறார்.

