இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் 4வது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். இதன்பின் முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை குவித்திருந்தது.
இங்கிலாந்து ஆதிக்கம்
இதையடுத்து 2ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க போராடினாலும், பென் ஸ்டோக்ஸ் பவுலிங் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் ரிஷப் பண்ட் 54 ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டிகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
2017ஆம் ஆண்டுக்கு பின் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் கிராலே – டக்கட் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இந்திய அணியின் பும்ரா மற்றும் அன்சுல் கம்போஜ் அட்டாக்கை தொடங்கினர். அன்சுல் கம்போஜ் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய டக்கட், பின்னர் அனைவரையும் வெளுத்து கட்டினார்.
பாவம் பும்ரா
இவருடன் கிராலேவும் அட்டாக்கில் இணைந்து கொள்ள, இந்திய அணியும் இப்போது விக்கெட் கிடைக்கும், அப்போது விக்கெட் கிடைக்கும் என்று காத்திருந்து காத்திருந்து காலம் போனதுதான் மிச்சம். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 166 ரன்களை குவித்தனர். சதம் அடிப்பார் என்று நம்பிய கிராலே 84 ரன்களில் ஆட்டமிழக்க, டக்கட் 94 ரன்களில் கம்போஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின் 2ஆவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 133 ரன்கள் மட்டும் பின் தங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்று ஒரே நாளில் பும்ரா மட்டும் 13 ஓவர்களை வீசி இருக்கிறார். சராசரியாக ஒரு இன்னிங்சில் பும்ரா 24 ஓவர்கள் வரை வீசுவார். ஆனால் இன்றே 13 ஓவர்கள் வீசி இருப்பதால், இந்திய அணி பாடு திண்டாட்டமாக மாறப் போகிறது.

