ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. இன்னும் 5 நாட்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே 5 அணிகள் பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள நிலையில், இந்திய அணி நாளை ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தான் செல்லவுள்ளன.
பிப்.19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், மார்ச் 9ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இறுதிப்போட்டி உட்பட ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 போட்டிகளில் விளையாடும். இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் பட்சத்தில், அந்த ஆட்டம் துபாய் மைதானத்திலும், ஒருவேளை இந்திய அணி முன்னேறவில்லை என்றால், இறுதிப்போட்டி லாகூர் மைதானத்தில் நடக்கும்.
8 ஆண்டுகளுக்கு பின்
இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகின்றன. 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ளதால், இம்முறை எந்த அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறக் கூடிய அணிகளை இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.
அதன்படி, நிச்சயம் இந்த வார்த்தைகள் கடினமாக இருக்கும். ஆனால் மிட்சல் ஸ்டார்க் விலகிய பின், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறுமா என்பது சந்தேகம் தான். அதனால் எனது கணிப்பின் படி இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
பீட்டர்சன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை தேர்வு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி அவ்வளவு எளிதாக ஐசிசி தொடர்களில் சோடை போகாது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பாகிஸ்தான் மண்ணில் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது.
இருந்தாலும் இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி மோசமாக இழந்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்ம் மோசமாக இருப்பதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். பீட்டர்சன் தனது கணிப்பை வெளியிட்ட பின் பல்வேறு ஜாம்பவான்களும் தங்களின் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

