இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் எட்ஜ்பாஸ்டனில் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து பிளேயிங் XI
இதனால் 2வது போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப இங்கிலாந்து அணிக்கு ஆர்ச்சர் திரும்புவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்ச்சரின் கம்பேக் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் நம்பப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஆர்ச்சர் சேர்க்கப்படவில்லை.
தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நம்பர் 3 வீரராக ஓலி போப் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் கடந்த போட்டியில் சதம் விளாசி இருந்தார். பின்னர் நம்பர் 4 வீரராக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட, நம்பர் 5 வீரராக ஹாரி ப்ரூக் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஆர்ச்சர் இருக்காரா?
பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்துவீச்சாளர்களாக பிரைடன் கார்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங்க் மற்றும் சோயப் பஷீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே அணியுடன் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இதன் மூலமாக இங்கிலாந்து அணி வெற்றிப் கூட்டணியை மாற்ற விரும்பவில்லை என்று பார்க்கப்படுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை 2 மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க உள்ளதாகவும், ஜடேஜாவை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை தேர்வு செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

