‘இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணி இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் களமிறங்க உள்ளது. விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ளது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுப்மன் கில் பேட்டி
இம்முறையாவது 2007ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பும்ரா, கேஎல் ராகுல், ஜடேஜா ஆகிய 3 பேரை கடந்து வேறு யாருக்கும் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் போதிய அளவில் இல்லை. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி ஓய்வை அறிவித்த பின், கம்பீருடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
அப்போது கம்பீர் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் நான் விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதேபோல் இம்முறை நானும் அந்த பேட்டிங் வரிசையில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய அணியில் ஒரு வெற்றிகரமான சிறந்த சூழலை உருவாக்கிவிட்டால், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறந்ததாக அமையும்.
சீனியர்களின் ப்ளூபிரிண்ட்
ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்திய அணியை வழிநடத்த 2 அல்லது 3 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஐபிஎல் தொடரை விடவும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது மிகப்பெரிய விஷயம்.
இந்திய அணியில் அனுபவம் குறைவாக உள்ளதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதுவும் நல்லது தான். ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் எந்தவித கவலையும் இல்லாமல், சுமையை சுமக்காமல் விளையாட முடியும். எங்கள் சீனியர் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ப்ளூபிரிண்டை கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் கொடுத்துள்ளார்கள். எந்த நேரத்தில் இருந்தும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

