ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை நடக்கவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. இந்த போட்டியில் வென்று 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை நடக்கவுள்ள ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துபாய் மைதானத்தில் இந்திய அணி விளையாட இருப்பதால், அரையிறுதியில் கூடுதல் சாதகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அரையிறுதி சுற்றை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.
ரோகித் சர்மா பேட்டி
அப்போது ரோகித் சர்மா பேசும் போது, துபாய் மைதானத்தில் ஒவ்வொரு முறை விளையாடும் போதும் புதிய சவால்கள் ஏற்படுகிறது. இந்த மைதானத்தில் ஆடிய 3 போட்டிகளிலும் வெவ்வேறு சவால்கள் பிட்சில் இருந்தது. இது எங்களின் சொந்த மண் கிடையாது. துபாயில் இருக்கிறோம். இங்கு ஏராளமான போட்டிகளை நாங்கள் விளையாடியதில்லை.
இந்த மைதானத்தை பொறுத்தவரை எங்களுக்கு புதிய மைதானம் போன்ற ஒன்றுதான். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவுலிங்கின் போது, பந்து கொஞ்சம் கூடுதல் ஸ்விங்காகியது. ஆனால் முதல் 2 போட்டிகளில் பெரிதாக ஸ்விங்கை பார்க்கவில்லை. அதேபோல் கடந்த 2 போட்டிகளில் பெரியளவில் ஸ்பின் எடுபடவில்லை. ஆனால் கடைசி ஆட்டத்தில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்தது.
5 பிட்ச்கள் இருக்கின்றன
அதனால் இந்த பிட்சில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதேபோல் என்ன நடக்காது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. துபாய் மைதானத்தில் 4 முதல் 5 பிட்ச்கள் இருக்கின்றன. அதில் எந்த பிட்சில் நாங்கள் அரையிறுதி சுற்றில் ஆடப் போகிறோம், என்பது தெரியவில்லை. ஆனால் என்ன நடந்தாலும் நாங்கள் அதற்கு தகவமைத்து ஆட வேண்டும். அதற்கு தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
2011ம் ஆண்டுக்கு பின் ஐசிசி தொடரில் நடந்த நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை ஒருமுறை கூட இந்திய அணி வீழ்த்தியதில்லை. இதனால் நாளைய ஆட்டத்திலாவது இந்திய அணி புதிய சாதனை படைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

