ஐபிஎல் 2025 வீரர்களின் தக்கவைப்பு குறித்துதான் இப்போது எங்கும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஐபிஎல் 2024-இல் தனது பேட்டிங் ஆர்டர் குறித்து சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடங்கும் முன் அது தோனியின் கடைசி ஐபிஎல் என்று பரவலாக பேசப்பட்டதால், தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான சீசன் ஆக இருந்தது. ஆனால், கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணியுடன் போராடித் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.
இந்தத் தொடரில் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் தோனி லோ ஆர்டரில் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்தார். தோனியின் பேட்டிங்கை காண கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. தற்போது அதற்கான காரணத்தை அவரே வெளியிட்டுள்ளார்.
அது குறித்து தோனி பேசும்போது “என் சிந்தனை எளிமையாக இருந்தது- மற்ற பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை நன்றாக செய்கிறார்கள் என்றால், நான் டாப் ஆர்டரில் இறங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் (சீசன்) பற்றி நீங்கள் பேசினால், டி20 உலகக் கோப்பை அணி விரைவில் அறிவிக்கப்படும் என்பது அந்த நேரத்தில் தெரியும். எனவே அந்த இடத்துக்காக போராடும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
எங்கள் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே தேர்வு பெற அதிக வாய்ப்பு இருந்தது, எனவே இந்திய அணியில் இடம்பிடிக்க தங்களை நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினேன்” என்று தோனி ஒரு நிகழ்வில் தெரிவித்தார்.
ஆனால் எனக்கோ, அணியில் தேர்வு தேர்வு பெறுவது மற்றும் பிற விஷயங்கள் போன்ற எதுவும் இல்லை. எனவே நான் [ஆர்டரைக் குறைத்து] பின்னால் பேட்டிங் செய்ய இறங்கினேன், நான் செய்ததில் எனது அணி மகிழ்ச்சியாக இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

