ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி சீசன் ஆக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இது குறித்து மகேந்திர சிங் தோனி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹசி மகேந்திர சிங் தோனி நல்ல நிலையில் இருக்கிறார் என்றும் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த சீசனில் கேப்டன் ஆக பணியாற்றிய மகேந்திர சிங் தோனி அந்த ஆண்டோடு ஐந்தாவது ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்துவிட்டு தனது கேப்டன் பதவியை விட்டு வெளியேறினார். கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்றதை அடுத்து தோனியும் தனது ஓய்வு முடிவினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த சீசனில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் கேப்டனாக இல்லாத சமயத்தில் அவரிடம் எந்த ஒரு பேட்டியையும் எடுக்க முடியாத காரணத்தால் அது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் மகேந்திர சிங் டோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
தோனி குறித்து அவர் கூறும் போது
“தோனி இந்த சீசனில் நன்றாக தயாராகி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். அவர் இன்னும் முன்னரே களம் இறங்கி நிறைய பந்துகளை எதிர்கொண்டு அடித்து ஆட முடியும். அவர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காரணத்தினால் அவரது உடற்தகுதி மீது நாம் அக்கறை கொள்ள வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் நன்றாகவே தயாராகி வருகிறார்.
அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் இறுதி முடிவு அவர்தான் எடுக்க வேண்டும். மகேந்திர சிங் தோனி இது குறித்து ஒரு டிராமாவை உருவாக்க விரும்புகிறார். அதனால் இது குறித்து அவரிடம் எந்த முடிவையும் நான் எதிர்பார்க்க மாட்டேன். அவர் பேட்டிங்கில் இன்னும் மேலே வந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இதையும் படிங்க: ஒரே ஒரு மழைதான்.. சன்ரைசர்ஸ், குஜராத் ஆட்டம் ரத்து.. சிஎஸ்கேவின் இரண்டாவது இடத்திற்கு ஆப்பு.. புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
ஆனால் அவரது காயம் காரணமாக அதில் கண்டிப்பாக அக்கறை கொண்டே ஆக வேண்டும். இதனால்தான் அவர் பின்பகுதியில் வந்து பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரைப் போல தற்போது முதல் பந்தில் இருந்து கிளீன் ஹிட் அடிப்பதற்கு ஆட்கள் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

